பேரரசன் அலெக்சாந்தர் கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் பேரரசர். மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலகவரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப்போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். இவர் பண்டைய அண்மைகிழக்கு, பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப்பகுதிகளை ஆண்ட அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் டேரியசை வென்றார்.